கல் குவாரியில் வெடி விபத்து ஒடிஷாவில் இருவர் உயிரிழப்பு
கல் குவாரியில் வெடி விபத்து ஒடிஷாவில் இருவர் உயிரிழப்பு
ADDED : ஜன 05, 2026 12:25 AM
புவனேஸ்வர்: ஒடிஷாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமம் அருகே கல் குவாரி ஒன்று செயல்படுகிறது.
இங்கு நேற்று முன்தினம் இரவு கற்களை வெடிவைத்து தகர்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வெடி விபத்தில் சிலர் சிக்கியுள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதை யடுத்து போலீசார், தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று கல் குவாரியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் பனி மற்றும் போதுமான வெளிச்சம் இல்லாததால், கற்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் பெரிய கற்களுக்கு அடியில் சிக்கியிருந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டன.
இது தவிர, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்த மேலும் சிலரை மீட்ட தீயணைப்பு துறையினர், அவர்களை அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில், இப்பகுதியில் செயல்படும் சட்டவிரோத கல் குவாரிகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், அவை தொட ர்ந்து செயல் பட்டது தெரியவந்தது.
வெடி விபத்து நடந்த கல் குவாரியும் சட்டவிரோதமாக செயல்பட்டது உறுதியானது.
இதற்கிடையே உயிரிழந்த இரு தொழிலாளர்களும் பாலசூர், கியோஞ்சர் மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
