ADDED : ஜன 29, 2024 11:12 PM
பத்தனம்திட்டா: தமிழகத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி நேற்று அதிகாலை லாரி ஒன்று சென்றது. இதேபோல் திருமண இசை கச்சேரிக்கு தேவையான உபகரணங்களுடன் கேரளாவின் ஆலப்புழா நோக்கி வேன் சென்றது.
திருவலா - கும்பாழா சாலையில் அதிகாலை, 6:45க்கு சென்ற போது சுருளிகோடு என்ற பகுதியில் காய்கறி ஏற்றி வந்த லாரி, எதிர்திசையில் வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி, சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் வாகனங்களில் இருந்த நபர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில், இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
இவர்களில் ஒருவர், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், மற்றொரு நபர் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் புன்னப்பரா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.