ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி ம.பி.,யைச் சேர்ந்த இருவர் கைது
ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி ம.பி.,யைச் சேர்ந்த இருவர் கைது
ADDED : அக் 18, 2024 03:25 AM

மூணாறு:கேரள மாநிலம் இடுக்கியில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே பாறத்தோடு பகுதியில் உள்ள ஏலத்தோட்டத்தில் மத்தியபிரதேசம் மாநிலம் வட்டோலா பகுதியைச் சேர்ந்த ராம்துர்வே 21, அருண்துர்வே 20, ஆகியோர் 4ஆண்டுகளாக தொழிலாளர்களாக வேலை செய்தனர். பெற்றோர் கடந்த வாரம் வந்ததால், அவர்களுடன் இருவரும் சொந்த ஊர் செல்வதாக தோட்ட உரிமையாளரிடம் கூறி தயாராகினர். அதற்கு முன் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
அக்.14ல் நள்ளிரவில் ஆயுதங்களைக் கொண்டு ஏ.டி.எம். இயந்திரத்தின் முன்பகுதியை உடைத்தனர்.
அதனுள் பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டனர். இதனால் பணம் தப்பியது.
கட்டப்பனை ஏ. எஸ்.பி. ராஜேஷ்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து புகைப்படத்தை வெளியிட்டனர்.
அதனை பார்த்து இருவரையும் நேற்று முன்தினம் அடையாளம் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்களை பிடித்த போலீசார் கைரேகையை ஒப்பிட்டு ஏ.டி.எம்.ல் கொள்ளையடிக்க முயன்றதை உறுதி செய்து இருவரையும் கைது செய்தனர்.