UPDATED : டிச 10, 2024 03:04 PM
ADDED : டிச 10, 2024 07:16 AM
பெங்களூரு: பெங்களூரில் செக்யூரிட்டி உட்பட இருவரை கொடூரமாக கொலை செய்து, தப்பிய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நேபாளைச் சேர்ந்தவர் பிக்ரம், 21. பீஹாரை சேர்ந்தவர் சோட்டு துாரி, 33. இவர்கள் பிழைப்பு தேடி பெங்களூருக்கு வந்தனர். எலஹங்காவின், தொழிற் பகுதியின் 4வது ஸ்டேஜில், வெங்கடேஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் அருகில் உள்ள தொழிற்சாலையில் பிக்ரம் செக்யூரிட்டியாக பணியாற்றினார்.
இந்த தொழிற்சாலை தற்போது இயங்கவில்லை. இங்குள்ள மெஷின்கள், பொருட்களின் பாதுகாப்புக்காக இவரை நியமித்திருந்தனர். வெங்கடேஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் சோட்டு துாரி ஓட்டுனராக பணியாற்றினார். இருவரும் நண்பர்களாகினர்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, வெங்கடேஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் அருகில் உள்ள டென்டில், தங்களின் நண்பர்களுடன் மதுபானம் அருந்தினர். நள்ளிரவு வரை பார்ட்டி நீடித்தது. அப்போது இவர்களுக்குள் ஏதோ காரணத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில், நண்பர்கள் பிக்ரமையும், சோட்டு துாரியையும், கூரான டைல்ஸ் துண்டால் கழுத்தில் குத்தியும், டைல்ஸ் கற்களால் தலையில் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். நேற்று காலை இதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த எலஹங்கா போலீசார், இருவரின் உடல்களை மீட்டனர். வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர். உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.