ADDED : டிச 25, 2024 12:51 AM
கோழிக்கோடு, கேரளாவில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கேரவன் வாகனத்தில், மர்மமான முறையில் இருவர் இறந்து கிடந்தனர்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கரிம்பனப்பாலம் என்ற இடத்தில், கடந்த 22ம் தேதி இரவு முதல், சாலையோரத்தில் கேரவன் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த இந்த வாகனம் குறித்து, போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கேரவனில் ஆய்வு செய்தனர். அப்போது, கேரவன் படிக்கட்டில் மனோஜ் என்பவரும், வாகனத்தின் உள்ளே ஜோயல் என்பவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
மலப்புரத்தைச் சேர்ந்த பிரபல வணிக குழுமத்துக்கு இந்த கேரவன் சொந்தமானது. கண்ணுாரில் திருமண வீட்டாரை 'டிராப்' செய்து, மலப்புரத்துக்கு கேரவனை மனோஜ் ஓட்டி வந்துள்ளார்.
வாகனத்தில், யு.பி.எஸ்., பவர் வாயிலாக 'ஏசி' இயங்கியதால், கார்பன் மோனாக்சைடு விஷ வாயு சேர்ந்துள்ளது.
இதை சுவாசித்ததால், டிரைவர் மனோஜ், ஜோயல் ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.