ADDED : பிப் 19, 2025 01:54 AM

மூணாறு:இடுக்கி மாவட்டம் பூப்பாறை அருகே ஆனயிறங்கல் அணையில் மூழ்கி ஊராட்சி உறுப்பினர் ஜெய்சன் 45, உட்பட 2 பேர் பலியாயினர்.
பூப்பாறை அருகே ராஜகுமாரி ஊராட்சி உறுப்பினர் மஞ்சகுழி பகுதியைச் சேர்ந்த ஜெய்சன் 45, அவரது நண்பர் பிஜூ 52, உட்பட நான்கு பேர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு ஆனயிறங்கல் அணையில் குளிக்க சென்றனர்.
அதனை கவனித்த அணை பாதுகாப்பு ஊழியர் நால்வரையும் எச்சரித்து அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு தமிழகத்திற்கு செய்வதாக கூறிச்சென்ற ஜெய்சன், பிஜூ ஆகியோர் குறித்து எவ்வித தகவலும் இல்லாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் ஆனயிறங்கல் அணை பகுதியில் ஜெய்சனின் கார் நிற்பதை பார்த்து சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சாந்தாம்பாறை போலீசார் ஆனயிறங்கல் அணை பகுதியில் நடத்திய சோதனையில் இருவருடைய அலைபேசிகள், உடைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதால் இருவரும் அணையில் விழுந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.மூணாறு தீயணைப்புதுறையினர் அணையில் நடத்திய தேடுதல் வேட்டையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு ஜெய்சனின் உடலை மீட்டனர்.
அதன்பிறகு தொடுபுழா, கோதமங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் அணையில் தேடி பிஜூவின் உடலை மீட்டனர்.அணை பாதுகாப்பு ஊழியர் எச்சரித்து அனுப்பிய பிறகு இருவரும் குளிக்க சென்றபோது அணையில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

