ADDED : அக் 13, 2025 01:38 AM
குருகிராம்:ஹரியானா மாநிலத்தில் நேற்று அதிகாலையில், கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின், தாதா பாம்பிஹா கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காலில் குண்டு பாய்ந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
குருகிராம் 39வது செக்டார் போலீசார், ராம்கர் கிராமம் அருகே நேற்று முன் தினம் நள்ளிரவில் வாகன சோதனை நடத்தினர். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, அந்த வழியாக வந்த இருவரை நிற்கும்படி போலீசார் சைகை செய்தனர். நெருங்கி வந்த இருவரும் போலீஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். போலீசாரும் உடனடியாக பதிலடி கொடுத்தனர்.
காலில் குண்டு பாய்ந்து இருவரும் சுருண்டு விழுந்தனர். இருவரையும் கைது செய்து, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த சுகன்ஜீத் என்ற காஞ்சா,24, சுமித் சர்மா,25, என்பதும், தாதா பாம்பிஹா கும்பலைச் சேர்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்தவுடன் விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறினர்.