தலித் நுழைந்ததால் இரண்டு கோவில்களுக்கு பூட்டு சிக்கமகளூரில் தாண்டவமாடும் தீண்டாமை
தலித் நுழைந்ததால் இரண்டு கோவில்களுக்கு பூட்டு சிக்கமகளூரில் தாண்டவமாடும் தீண்டாமை
ADDED : ஜன 06, 2024 06:57 AM
சிக்கமகளூரு: தரிகெரேவின், கேருமரடி கிராமத்தில் தலித் இளைஞர் நுழைந்ததால், இரண்டு கோவில்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு, தரிகெரேவின், எம்.சி., ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாருதி, 28. ஜே.சி.பி., ஓட்டுனர். இவர் பழைய வீட்டில் மண்ணை அள்ளும் பணிக்காக, ஜனவரி 1ல் கேருமரடி கிராமத்தின் கொல்லரஹட்டிக்கு சென்றிருந்தார். ஜே.சி.பி.,யில் சென்றபோது, டிஷ் கேபிள் மீது மோதி துண்டானது.
இதனால் மாருதிக்கும், கொல்லரஹட்டியின் சங்கரப்பாவுக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது மாருதி தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தவுடன், 30 முதல் 40 பேர் கொண்ட கும்பல், அவரை ஜே.சி.பி.,யில் இருந்து, வெளியே இழுத்து தாக்கியது.
இது தொடர்பாக, தரிகெரே போலீஸ் நிலையத்தில் மாருதி புகார் அளித்துள்ளார். இவரை தாக்கியது குறித்து, 15 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. சங்கரப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு பின், தலித் சங்கங்களின் தலைவர்கள் கொல்லரஹட்டிக்கு வந்து, தகவல் சேகரிக்கின்றனர்.
இதே காரணத்தால், இங்குள்ள ரங்கநாத சுவாமி கோவில், திம்மப்பன சுவாமி கோவில்களை பூட்டி வைத்துள்ளனர். மூன்று நாட்களாக எந்த பூஜைகளும் நடத்தப்படவில்லை. எப்போது கோவில் திறக்கும் என்பதும் தெரியவில்லை.
கிராமத்தினர் கூறியதாவது:
ரங்கநாதசுவாமி, திம்மப்பன சுவாமி மீது, கிராமத்தினருக்கு அபார பக்தி உள்ளது. எந்த சமுதாயத்தினர் வேண்டுமானாலும், கோவிலுக்கு வந்து வணங்கலாம். ஆனால் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும், எங்கள் வீதியில் நுழைய கூடாது. அவர்கள் நுழைந்தால் கடவுள் எங்களுக்கு நல்லது செய்யமாட்டார்.
இந்த சமுதாயத்தினர் நுழைந்தது தெரிந்தால், எங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கடவுள் விக்ரகத்துக்கு கங்கா ஸ்நானம் செய்து, நிவர்த்தி பூஜை செய்வோம். கல்லத்தகிரி நீர் வீழ்ச்சி வரை 15 கி.மீ., தொலைவு கால் நடையாக கடவுள் பல்லக்கை சுமந்து செல்வோம்.
தற்போது தினமும் போலீசாரும், போராட்டக்காரர்களும் வந்து செல்கின்றனர். இன்னும் எத்தனை நாட்களுக்கு, இந்த சூழ்நிலை இருக்கும் என்பது தெரியாது. மாதங்கள் ஆகலாம். அதன் பின்னரே கங்கா பூஜை செய்து, நிவர்த்தி பூஜை செய்வோம். அதுவரை கோவில்களின் கதவு திறக்கப்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
சமூக நலத்துறை துணை இயக்குனர் யோகேஷ் கூறுகையில், “எஸ்.சி., பிரிவினரை தாழ்ச்சியாக பார்ப்பது தவறு. இனி இது போன்று நடக்க கூடாது என, கொல்லரஹட்டி மக்களை எச்சரித்துள்ளோம். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்,” என்றார்.