ADDED : ஜன 09, 2025 09:57 PM
ராம்புரா: பணியிடத்தில் தொடர்ந்து அவமதித்ததால் தொழிலாளி ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சக பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராம்புராவில் உள்ள ஒரு பூட்டிய அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செவ்வாய்க்கிழமை இரவு போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அங்கு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு சில நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிந்தது. விசாரணையில் அது கோலு, 25, என்பது தெரிய வந்தது. அவரது மொபைல் போன் ஆய்வு செய்தபோது, ராம்புராவைச் சேர்ந்த ரஞ்சித், 30, என்பவருடன் கோலு அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக உரையாடியதை போலீசார் கண்டறிந்தனர்.
ரஞ்சித்தின் சமூக ஊடகக் கணக்கை ஆய்வு செய்ததில் முக்கிய தடயங்கள் கிடைத்தன. போலீசார் பல இடங்களில் சோதனை நடத்தி, ரஞ்சித், நீரஜ் வர்மா, 23, ஆகிய இருவரை பிடித்தனர்.
இருவரும் கோலுவுடன் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களை கோலு அவ்வப்போது அவமானப்படுத்தி வந்துள்ளார். பின் தாக்கவும் தொடங்கியுள்ளார். இதற்கு பழிவாங்கவே அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர்.