டாக்சியில் செல்வோர் கவனிக்க! பெண் பயணிக்கு நேர்ந்த பகீர் சம்பவம்
டாக்சியில் செல்வோர் கவனிக்க! பெண் பயணிக்கு நேர்ந்த பகீர் சம்பவம்
ADDED : அக் 20, 2024 04:00 PM

பெங்களூரு: ஏர்போர்ட்டுக்கு குடும்பத்துடன் சென்ற இளம் பெண்ணிடம் கூடுதலாக ரூ.2500 பயணக்கட்டணம் கேட்டு உபேர் டாக்சி டிரைவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் டாக்சியில் பயணம் என்பது வெகு சாதாரணமாகி விட்டது. அதற்கான ஆப் பயன்படுத்தி இஷ்டப்பட்ட வாகனத்தை புக் செய்து எங்கு வேண்டுமானாலும் போகலாம். பேரம் கிடையாது, இத்தனை கிலோ மீட்டருக்கு இவ்வளவு தான் வாடகை என நிர்ணயிக்கப்பட்ட பயணக்கட்டணமே வசூலிக்கப்படுவதால் டாக்சிகளில் பயணிப்பதை மக்கள் விரும்பி வருகின்றனர்.
டாக்சி பயணம் இனிமையாக இருந்தாலும், எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தப்பு ஒட்டுமொத்த டாக்சிகளை இயக்குவோருக்கும் கெட்ட பெயராக மாறிவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு;
நிதி தாரா என்ற பெண் தமது குடும்பத்துடன் மைசூருவில் இருந்து கெம்பேகவுடாவில் உள்ள விமானநிலையத்துக்கு செல்ல விரும்பினார். இதற்காக அவர் ஆப் ஒன்றின் மூலம், உபேர் டாக்சியை புக் செய்திருந்தார்.
புக் செய்த சில நிமிடங்களில் அவருக்கான டாக்சியும் அனுப்பப்பட்டது. கெம்பேகவுடா விமான நிலையம் சென்றவுடன் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையுடன் கூடுதலாக ரூ.450 தந்துள்ளார். ஆனால் அந்த தொகை போதாது என்று விமான நிலையத்தில் நிதி தாராவிடம், டாக்சி டிரைவர் மல்லுக்கு நின்றுள்ளார்.
எக்ஸ்டிரா பணம் தரமுடியாது என்று விடாப்பிடியாக நிதி தாராவும் உடும்புப்பிடியாக இருக்க, அங்கே திடீர் சலசலப்பு உருவானது. இதை அங்குள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் கோபமான டாக்சி டிரைவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
அன்றிரவு மைசூருவில் உள்ள நிதி தாரா வீட்டுக்குச் சென்ற அதே டாக்சி டிரைவர், அங்கிருந்த அவரது தாத்தா, பாட்டியிடம் ரூ.2500 கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கேட்டு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவத்தால் ஷாக் ஆன நிதி தாரா, ஆப் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு உரிய பதிலை நிர்வாகம் தரவில்லை என்று தெரிகிறது. எவ்வளவோ முயற்சித்தும் புகார் மீது உபேர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை.
தமக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை அவர் சமூக வலைதளத்தில் முழுமையாக பகிர்ந்துள்ளார். நடந்த முழு சம்பவத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை. தனக்கும், தமது குடும்பத்துக்கும் நேர்ந்த சம்பவம், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் எளிதானதல்ல என்ற நிதி தாரா, ஒரு பயணம் தங்கள் குடும்பத்தினருக்கு பெரும் ஆபத்தான சூழலை உருவாக்கி இருப்பதாக கூறி உள்ளார். இது போன்ற வேறு ஒரு சம்பவம் யாருக்கும் நேரக்கூடாது என்பதற்காகவே சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.