காரியமாகனுமா ‛‛கழுதையானாலும் காலைப் பிடி'': உத்தவ்வை விமர்சித்த பா.ஜ.,
காரியமாகனுமா ‛‛கழுதையானாலும் காலைப் பிடி'': உத்தவ்வை விமர்சித்த பா.ஜ.,
UPDATED : ஆக 12, 2024 05:00 PM
ADDED : ஆக 12, 2024 04:55 PM

புதுடில்லி: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், முதல்வர் பதவிக்காக அற்ப மனிதர்கள் காலில் விழுந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
மஹாராஷ்டிர சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இதற்கிடையே அம்மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் டில்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இதனை பா.ஜ., தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறியதாவது: உத்தவ் தாக்கரே முதல்வர் பதவிக்காக அற்ப மனிதர்களின் காலில் விழுந்துள்ளார். அவர் முற்றிலும் மதசார்பற்றவராக மாறிவிட்டார், சிவசேனாவின் சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டார்.
அவரது தந்தை பாலாசாகேப் தாக்கரேவின் குணங்களில் ஒரு சதவீதம் கூட அவரிடம் இல்லை. அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களை உத்தவ் தாக்கரே கண்டிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

