சுய மரியாதையை இழந்து விட்டார் உத்தவ்: தேவேந்திர பட்னவிஸ், ஷிண்டே விமர்சனம்
சுய மரியாதையை இழந்து விட்டார் உத்தவ்: தேவேந்திர பட்னவிஸ், ஷிண்டே விமர்சனம்
ADDED : ஆக 10, 2025 12:54 AM

மும்பை: டில்லியில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், உத்தவ் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதை விமர்சித்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர், சுயமரியாதையை உத்தவ் இழந்து விட்டதாகக் குறிப்பிட்டனர்.
குற்றச்சாட்டு டில்லியில், கடந்த 7ல் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 2024 லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்ததாக சில புள்ளி விபரங்களுடன் குற்றஞ்சாட்டினார். இதை தேர்தல் கமிஷன் மறுத்தது.
அன்றைய தினம் இரவு, டில்லியில் உள்ள தன் வீட்டில், 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்களை ராகுல் சந்தித்தார். அப்போது, தேர்தல் முறைகேடு தொடர்பாக, விளக்கப் படங்களுடன் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ராவத் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அவர்களுக்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதாக, மஹாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ., - சிவசேனா விமர்சித்துள்ளன. கடைசி வரிசையில் உத்தவ், ஆதித்யா, சஞ்சய் ராவத் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் அக்கட்சிகள் வெளியிட்டுள்ளன.
கடைசி வரிசை பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறுகையில், “தே.ஜ., கூட்டணியில் இருந்த போது, முன்வரிசையில் உத்தவ் தாக்கரேவுக்கு இடமளிக்கப்பட்டது.
''அவருக்கு நாங்கள் முக்கிய த்துவம் அளித்தோம். ஆனால், அவரது நிலைமையை தற்போது பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. அதிகாரத்தில் கூட காங்., இல்லை. கடைசி வரிசையில் இருக்கை அ ளித்து, உத்தவை அக்கட்சி அவமதித்து விட்டது,” என்றார்.
சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “சுயமரியாதையை விட்டுக்கொடுத்து, பால் தாக்கரேயின் கொள்கைகளைக் கைவிடுபவர்கள் இந்த அவமானத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
''உத்தவுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை காங்., கொடுத்துள்ளது,” என்றார்.
உண்மை தெரியாமல் பேசுவதா?
உண்மை தெரியாமல் பட்னவிஸ், ஷிண்டே பேசுகின்றனர். முன்வரிசையில் தான் நாங்கள் அமர்ந்திருந்தோம். டிவி திரை கண்களை கூசியதால், பின் வரிசைக்கு சென்றோம். மற்ற புகைப்படங்களை பாருங்கள். அதில், உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா, ராகுல் அளித்த வரவேற்பை பார்க்கலாம். சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா

