மாணவர்களுக்கு இலவச கல்வி: உத்தவ் தாக்கரே கட்சி வாக்குறுதி
மாணவர்களுக்கு இலவச கல்வி: உத்தவ் தாக்கரே கட்சி வாக்குறுதி
UPDATED : நவ 08, 2024 03:42 AM
ADDED : நவ 08, 2024 01:36 AM

மும்பை : மஹாராஷ்டிராவில் மாணவர்களுக்கு இலவச கல்வி, அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையாக வைத்திருத்தல், தாராவி மறுமேம்பாட்டு திட்டத்தை ரத்து செய்வது போன்றவற்றை, உத்தவ் தாக்கரே கட்சி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
தனி தேர்தல் அறிக்கை
இதையொட்டி எதிர்க்கட்சி கூட்டணியான சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு, காங்கிரஸ் ஆகியவை சேர்ந்த மஹா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில், ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கூட்டணியில் உள்ள சிவசேனா உத்தவ் பிரிவு சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் அறிக்கையை மும்பையில் உள்ள தன் வீட்டில் இருந்தபடியே நேற்று வெளியிட்டார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் கட்சியின் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மஹா விகாஸ் அகாடி அளித்தவற்றின் ஒருபகுதியே.
தற்போது மஹாராஷ்டிராவில் மாணவியருக்கு அரசு இலவச கல்வி வழங்குகிறது.
வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும்.
மறுமேம்பாட்டு திட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் நிலையானதாக வைக்கப்படும். மும்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தாராவி மறுமேம்பாட்டு திட்டம் ரத்து செய்யப்படும்.
விரைவான நகர மயமாக்கலை மனதில் வைத்து மஹாராஷ்டிரா மற்றும் மும்பையில் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். இது தவிர இளைஞர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.