ADDED : டிச 01, 2024 11:13 PM

பெங்களூரு: கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற உடுப்பி ஹோட்டல் அயோத்தியில் துவங்கப்பட்டுள்ளது. இதை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, 'எக்ஸ்' வலை தளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:
அயோத்தி, ராம ஜென்ம பூமியில் உடுப்பி ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. பாகல்கோட், முதோலின், லோகாபுராவை சேர்ந்த குனாகர் ஷெட்டி என்பவர், இந்த ஹோட்டலை திறந்துள்ளார்.
இங்கு வரும் ராம பக்தர்களுக்கு, கர்நாடக பாணியில் சுவையான உணவு கிடைக்கும். ராமர் கோவிலில் இருந்து, 500 மீட்டர் தொலைவில், ராம்பத் சாலையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. 'உடுப்பி அயோத்தியா புட் பேலஸ்' என்ற பெயரில் ஹோட்டல் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹோட்டல் உரிமையாளர் குனாகர ஷெட்டி கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட பின், ஹோட்டலில் உணவு, தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகரித்துள்ளது.
நாங்கள் திறந்துள்ள ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதியில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு சுமை இல்லாதபடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் பணியாளர்களை நியமிப்பதில், கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு கவனிப்பு இருக்கும். உடுப்பியின் பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தலைமையில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, திறந்து வைத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.