ADDED : ஜன 21, 2025 07:20 AM

பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும். அந்த கஷ்டத்தை தீர்க்க கோவிலுக்கு செல்வர். மனதில் இருக்கும் சொல்ல முடியாத விஷயங்களை கூட தெய்வத்திடம் சென்று முறையிடுவர்.
கடவுளிடம் நாம் வேண்டிக் கொண்டு வந்தோமே. அந்தக் காரியம் நல்லபடியாக நடக்குமா, நடக்காதா என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கலாம். ஆனால் பக்தர்கள் மனதில் இருக்கும் குழப்பத்தை, கல் மூலம் தீர்த்து வைக்கும் கோவில் உள்ளது.
துமகூரின் மதுகிரி அருகே உள்ளது துவாரலு கிராமம். இந்த கிராமம், மதுகிரி -- சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் உடுசலம்மா என்ற கோவில் உள்ளது. இங்கு உடுசலம்மா தேவி அருள்பாலித்து வருகிறார். அம்மனுக்கு சன்னிதி எதுவும் கட்டப்படவில்லை. திறந்த வெளியில், ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட அம்மன் சிலை உள்ளது.
இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக, அப்பகுதியினர் கருதுகின்றனர். இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. நெடுஞ்சாலையை ஒட்டி கோவில் இருப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர். இந்த கோவிலுக்கு என்று ஒரு மகிமை உள்ளது.
அம்மன் சிலைக்கு நேராக, ஏராளமான வட்ட வடிவிலான கற்கள் போடப்பட்டு உள்ளன. இந்த கல்லின் மீது அமர்ந்து, நம் வேண்டுதல்களை நினைத்தால், அந்தக் காரியம் நிறைவேறும் என்றால் கல் தானாக சுற்றும்; காரியம் நிறைவேறாது என்றால் கல் சுற்றாது. இது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
இக்கோவிலுக்கு பூசாரி என்று தனியாக யாரும் இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆந்திராவில் இருந்தும் நிறைய பக்தர்கள் வருகின்றனர். பெங்களூரில் இருந்து இந்த கோவில் 132 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சிராவுக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிராவுக்கு வந்து அங்கிருந்து ஆட்டோவில் கோவிலை சென்றடையலாம் - நமது நிருபர் --.

