பயங்கரவாதிகள் தகவல் பரிமாறிய 'அல்ட்ரா' தொழில்நுட்ப போன்கள்
பயங்கரவாதிகள் தகவல் பரிமாறிய 'அல்ட்ரா' தொழில்நுட்ப போன்கள்
ADDED : மே 04, 2025 01:00 AM

புதுடில்லி: பஹல்காம் படுகொலை உட்பட, ஜம்மு - காஷ்மீரில் தீவிரமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பின் தொடர்வதில் தொழில்நுட்ப நுண்ணறிவு இல்லாதது, நம் படையினருக்கு மிகப் பெரிய குறையாகவே தொடர்கிறது.
'முந்தைய காலங்களில் பாக்., பயங்கரவாதிகள், 'மொபைல் போன், சாட்டிலைட் போன்'களையே தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்தனர்; சில நேரங்களில், 'ரேடியோ' அலைபேசிகளை கூட பயன்படுத்தி உள்ளனர்.
'அப்போதெல்லாம் நம் பாதுகாப்பு படையினர் அந்த தகவல் தொடர்புகளை இடைமறித்து, பல ரகசிய தகவல்களை உருவியுள்ளனர்.
தகவல் தொடர்பு
ஆனால், கடந்த 2 - 3 ஆண்டுகளாக இது போன்ற உளவு தகவல்களை பெற முடிவதில்லை' என, ராணுவ உளவுப்பிரிவில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தான் பயங்கரவாதிகள் தரப்புக்கு சாதகமாக மாறியுள்ளது. ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகள், உள்ளூர்வாசிகளின் மொபைல் போன்கள், 'வைபை நெட்வொர்க்'குகள் போன்ற வழக்கமான தகவல் தொடர்புகளையே பயன்படுத்துகின்றன.
ஆனால், லஷ்கர், 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' போன்ற அமைப்புகள், 'என்க்கிரிப்டட்' தகவல் தொடர்பு முறையை பயன்படுத்துகின்றன.
'என்க்கிரிப்டட்' என்றால், மற்றவர்கள் காண முடியாத அல்லது இடைமறித்து உளவு பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியாத குறீயீடுகளை கொண்ட தகவல் பரிமாற்ற முறை.
லஷ்கர் பயங்கரவாதிகள், 'அல்ட்ரா' என்ற அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக நம் உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது, சீன தொழில்நுட்பம் என தெரியவந்துள்ளது.
'அல்ட்ரா' தொழில்நுட்பத்தை வழக்கமான மொபைல் போன் உடன் இணைக்க முடியும். அதில் இருந்து ரேடியோ நெட்வொர்க் வழியாக தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியும் என கூறுகின்றனர்.
அதில் இருந்து பாகிஸ்தானுக்கு எவ்வாறு சிக்னல் அனுப்பப்படுகிறது என்பதை நம் தொழில்நுட்ப பிரிவினரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆரம்பத்தில், இந்த அல்ட்ரா தொழில்நுட்பத்தால் எழுத்து வடிவிலான குறுந்தகவல்களை மட்டுமே அனுப்ப முடியும். தற்போது குரல் குறுந்தகவல்கள், 'வீடியோ' உள்ளிட்டவற்றை அனுப்பும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாம்.
இந்த அல்ட்ரா தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் 'சுவிட்ச் ஆன்' செய்யப்பட்டதும், நம் பாதுகாப்பு படையினரால் அதை கண்டுபிடித்துவிட முடியும்.
ஆனால், அது உள்ள இடத்தை பொத்தாம் பொதுவாகத் தான் அடையாளம் காண முடிகிறது. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை பின்தொடரும் நம் படையினர்கூட, இந்த அல்ட்ரா செயல்பாட்டை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், இயங்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய முடியவில்லை என்றனர்.
ஜம்மு - காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகளுடன் நம் பாதுகாப்பு படையினர் நடத்திய பல்வேறு சண்டைகளின் போது, அல்ட்ரா தொழில்நுட்ப போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுரான்கோட்டில் உள்ள சிந்தாரா என்ற இடத்தில், 2023ல் நடந்த என்கவுன்டரின் போது முதல்முறையாக அல்ட்ரா தொழில்நுட்ப போன்கள் கைப்பற்றப்பட்டன.
அதிலிருந்து அனுப்பப்பட்ட தகவல்கள், எண்கள், பெயர்கள் உள்ளிட்ட விபரங்களை எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த தொழில்நுட்பம் இரும்புக் கோட்டையாக உள்ளது.
வழிகாட்டி
லஷ்கர் பயங்கரவாத அமைப்பு, பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினரின் நிதியில் கொழுத்து வருவதால், அவர்களுக்கு இது போன்ற தொழில்நுட்பங்கள் எளிதில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ஏதாவது ஒரு வெளிநாட்டில் இருந்தும் அவர்களுக்கு இந்த போன் கிடைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே போல, ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர, பயங்கரவாதிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
'ஆல்பைன் குவெஸ்ட்' என்ற வழிகாட்டி செயலியை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மலை ஏற்ற வீரர்கள் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இதன் சிறப்பம்சம் நாம் செல்ல வேண்டிய இடத்தை முன்கூட்டியே இதில் பதிவு செய்தால், இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே இந்த செயலி வழிகாட்டும்.