இந்தியாவின் முயற்சியால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., தடை: மத்திய அரசு
இந்தியாவின் முயற்சியால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., தடை: மத்திய அரசு
ADDED : ஜூலை 24, 2025 06:33 PM

புதுடில்லி: '' இந்தியா எடுத்து வரும் தொடர் முயற்சி காரணமாக பாகிஸ்தானைச் சேர்ந்த பல பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஐ.நா., தடை விதித்துள்ளது,'' என மத்திய அரசு பார்லிமென்டில் தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து தூண்டிவிடப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தொடர் முயற்சி காரணமாக தான், சர்வதேச சமூகமானது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த நமது கவலையை புரிந்து கொண்டுள்ளன. இந்தியாவின் தாடர் முயற்சியால், பாகிஸ்தானை சேர்ந்த பல பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது. பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப் அமைப்பும், பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்து இருந்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா., பாதுகாப்பு சபை, அதற்கு காரணமான பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கையை பல உலக தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய டிஆர்எப் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.