50 ஆயுதங்களை கூட எதிர்கொள்ள முடியாமல் இந்திய விமானப்படையிடம் பணிந்தது பாக்.,
50 ஆயுதங்களை கூட எதிர்கொள்ள முடியாமல் இந்திய விமானப்படையிடம் பணிந்தது பாக்.,
ADDED : ஆக 31, 2025 01:29 AM

புதுடில்லி: பாகிஸ்தானை பணிய வைக்க, 50க்கும் குறைவான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டதாக விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்., 22ல் சுற்றுலா பயணியரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, பாக்., பயங்கரவாதிகளுக்கு நம் ராணுவம் பதிலடி கொடுத்தது.
இந்த, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை குறித்து நம் விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி நேற்று கூறியதாவது:
நமக்கு நிறைய இலக்குகளை தாக்கி அழிக்க வேண்டியிருந்தது. இறுதியாக ஒன்பது இலக்குகளை குறிவைத்தோம்.
எப்போதுமே ஒரு போரை துவங்குவது எளிது. அதை முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. எனவே, பாக்.,குடனான போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி யோசித்தே தாக்குதலை துவங்கினோம்.
ஐ.ஏ.சி.சி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த விமானப் படை கட்டுப்பாட்டு அமைப்புதான், தாக்குவது, தாக்குதலை தடுத்து நிறுத்துவது என இரண்டு வகையான போர் உத்திகளுக்கும் நமக்கு முதுகெலும்பாக இருந்தது.
இந்த அமைப்பால் நம் படைகளுக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டது. அதே சமயம் பதிலடி பலமாக இருந்தது. இது தான் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிடியாக இறங்கியது.
பயங்கரவாதிகளுக்கும், எதிரிகளுக்கும் அளிக்கப்படும் தண்டனை காண கூடியதாக இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் தாக்குதல் நடந்தால், அதை தடுக்கும் விதமாக இருக்க வேண்டும். நம் ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என, மூன்று முக்கியமான உத்தரவுகள் உயரதிகாரிகளிடம் இருந்து வந்தன.
அதன் அடிப்படையில், எதிரிகளின் எந்த வொரு நடவடிக்கையையும் முறியடிக்கும் வகையில் நம் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. அது மிகப்பெரிய அளவில் பலன் கொடுத்தது.
ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்கள் மூலம் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் காரணமாக வான்வழி, கடல்வழி, தரைவழி என அனைத்து வகையிலான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்வதாக கூறிய பாகிஸ்தான், கடந்த மே 10ம் தேதி மாலை இந்தியாவிடம் பணிந்தது.
இத்தனைக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, 50 ஆயுதங்களை கூட பயன்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

