லோக்சபா தேர்தலுக்கு தயாராக முடியாமல் தவிப்பு!: சர்ச்சை கருத்துகளை உளறும் தலைவர்கள்
லோக்சபா தேர்தலுக்கு தயாராக முடியாமல் தவிப்பு!: சர்ச்சை கருத்துகளை உளறும் தலைவர்கள்
ADDED : ஜன 29, 2024 07:15 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் மனம் போனபடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமலும், தேர்தலுக்கு தயாராக முடியாமலும் காங்கிரஸ் மேலிடம் கையை பிசைகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலிலும் அதிக தொகுதிகள் கைப்பற்ற, அக்கட்சித் தலைவர்கள் திட்டமிடுகின்றனர்.
முட்டுக்கட்டை
தேர்தலுக்கு தயாராவது குறித்து தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் சிவகுமார், முதல்வர் சித்தராமையா உட்பட, அனைவரும் திட்டமிடுகின்றனர்.
அப்படிப்பட்ட சூழலில், அடுத்த முதல்வர், துணை முதல்வர்கள் பதவி குறித்த சர்ச்சை தொடர்கிறது. இந்த விஷயங்களில் கட்சி மேலிடம் பல முறை தலையிட்டு எச்சரித்தும், மாநிலத் தலைவர்களின் வாய்க்கு பூட்டுப் போட முடியவில்லை.
அமைச்சர் ராஜண்ணா, மூத்த தலைவர் சிவசங்கரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மேலிடத் தலைவர்கள் தவிக்கின்றனர். அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, கட்சியின் எண்ணத்துக்கு இத்தகைய தலைவர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் ஏராளமான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர்.
தவிர சித்தராமையா, சிவகுமார் அணி என, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பிளவுபட்டுக்கிடக்கின்றனர். இவர்களை அரவணைத்துச் செல்வதும், வாய்ப்பூட்டு போடுவதும் கட்சித் தலைவர்களுக்கு தினமும் பெரும் சவாலாகவே இருக்கிறது. இவர்களை சமாதானம் செய்யும் நோக்கில், கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர்கள் பதவியை காங்கிரஸ் அரசு வழங்கியது.
அடிமைகளா?
இந்த விஷயத்திலும் அதிருப்தி வெடித்துள்ளது. சிலர் இந்த பதவியை நிராகரித்துள்ளனர். தன்னுடன் ஆலோசிக்கவில்லையென, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா கொதிப்படைந்துள்ளார்.
“டில்லியில் அமர்ந்து பட்டியலிட்டு, லாட்டரி டிக்கெட் கொடுப்பது போன்று கொடுத்தால் எப்படி? எங்களை ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா? நாங்கள் என்ன, காங்கிரஸ் மேலிடத்தின் அடிமைகளா? இப்படியே நடந்து கொண்டால், லோக்சபா தேர்தலில் மேலிடமே இங்கு வந்து, வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டி வரும்,” என, எச்சரித்திருந்தார் ராஜண்ணா. இவரின் பேச்சு, கட்சியில் சூறாவளியை கிளப்பியது.
மற்றொரு புறம் மூத்த தலைவர் சிவசங்கரப்பா, பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவுக்கு பகிரங்கமாக ஓட்டு கேட்டதும் கட்சித் தலைவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பும், 'காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின், லிங்காயத் சமுதாய அதிகாரிகளுக்கு அநியாயம் நடக்கிறது' என கூறி, தன் கட்சித் தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியவர் தான் சிவசங்கரப்பா.
இவர்கள் மட்டுமல்ல, துணை முதல்வர் பதவி விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் அடிதடியே நடக்கிறது. கட்சியின் உட்கட்சி பூசலால், லோக்சபா தேர்தலில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டுமென, டில்லி மேலிடம் போடும் கணக்கு என்ன ஆகுமோ என்ற கவலை, முதல்வர் சித்தராமையாவுக்கு.
சர்ச்சை பேச்சு
சிவசங்கரப்பா, ராஜண்ணா, பசவராஜ்ராயரெட்டி, பி.ஆர்.பாட்டீல், ஹரிபிரசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்களை அஸ்திரமாக பயன்படுத்த எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் திட்டமிடுகின்றன.
எதிர்க்கட்சிகளை சமாளிப்பதை விட, கட்சிக்குள் இருக்கும் தலைவர்களை சமாளிப்பது, மாநிலத் தலைமைக்கும் தேசிய தலைமைக்கும் பெரும்பாடாக இருக்கிறது. இவர்களை வைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலுக்கு எப்படி தயாராவது என்பது தெரியாமல் காங்., தலைவர்கள் கையை பிசைகின்றனர்.
மூத்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவேளை நடவடிக்கை எடுத்தால், தேர்தலில் எதிரொலிக்குமோ, அரசை ஆட்டம் காண வைக்குமோ என, காங்., மேலிடம் அஞ்சுகிறது. எனவே அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.