ADDED : ஜன 09, 2025 06:34 AM
மைசூரு: மைசூரின், இன்போசிஸ் நிறுவன வளாகத்தில் தென்பட்ட சிறுத்தை, சிக்காமல் ஆட்டம் காட்டுகிறது.
மைசூரு நகரின் ஹெப்பாலில் இன்போசிஸ் நிறுவனம் உள்ளது. 10 நாட்களுக்கு முன்பு, நிறுவன வளாகத்தில் சிறுத்தை நடமாடியது.
வனத்துறையினர், டிரோன் கேமரா உதவியுடன் சிறுத்தையை தேடி வருகின்றனர். 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நிறுவன வளாகத்தில் முகாமிட்டு, இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்றும்படி, இன்போசிஸ் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பயிற்சி ஊழியர்கள் அலுவலகத்துக்கு வருகின்றனர். இவர்கள் சிறுத்தை பயத்துடன் நடமாடுகின்றனர்.
இதுவரை சிறுத்தை சிக்காமல், வனத்துறையினருக்கு 'போக்கு' காட்டுகிறது. எனவே பயிற்சி ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
'வெளி வளாகத்தில் உள்ள இருக்கைகளில், தனியாக அமரக் கூடாது. எங்கு சென்றாலும், ஐந்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செல்ல வேண்டும். மாலை மற்றும் இரவு நேரத்தில், தேவையின்றி அலுவலக வளாகத்தில் நடமாட கூடாது' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

