திருடுவதில் வேற லெவல்; வாழைப்பழத்தையும் விடாத 'அண்டர்வேர்' கும்பல்!
திருடுவதில் வேற லெவல்; வாழைப்பழத்தையும் விடாத 'அண்டர்வேர்' கும்பல்!
ADDED : செப் 03, 2024 12:12 PM

நாசிக்; நாசிக் அருகே உள்ளாடை அணிந்து வரும் மர்ம கும்பல் வீடு புகுந்து ரு.5 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன், அங்கிருந்து வாழைப்பழத்தையும் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
இதுபற்றிய விவரம் வருமாறு; மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் கல்லூரியில் மர்ம கும்பல் ஒன்று புகுந்துள்ளது. 4 பேர் கொண்ட அந்த கும்பல் வெறும் உள்ளாடைகள் அணிந்தபடி வலம் வந்துள்ளது. இந்த நடமாட்டங்கள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.
அந்த கும்பலில் ஒருவர் யாரேனும் வருகின்றனரா என்று கண்காணித்தபடி இருக்க, மற்ற 3 பேரும் முன்னரே திட்டமிட்டு வைத்திருந்த வீட்டில் கொள்ளையை அரங்கேற்றினர். இந்த சம்பவத்தில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் வேற லெவலில் இருக்கிறது.
வெறும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்தபடி, முகங்களை மறைத்தவாறு கைகளில் கூர்மையான ஆயுதங்களுடன் சென்று உள்ளனர். பின்னர் உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தை முடித்து விட்டு சாவகாசமாக புறப்படுகிறது. போகும்போது அந்த கும்பல் வாழைப்பழங்களை தூக்கிச் சென்றிருப்பது தான் ஹைலைட்.
கிட்டத்தட்ட ரூ.5 லட்சத்துடன் வாழைப்பழத்தையும் விடாமல் அள்ளிச் சென்ற காட்சிகள் சி.சி.டிவி.,யில் தெளிவாக பதிவாகி உள்ளது. பின்னர் இதே ஸ்டைலில் கல்லூரி ஒன்றிலும் கொள்ளையை நடத்தி இருக்கின்றனர்.
கொள்ளை தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி உள்ள போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதே ஸ்டைலில் பெண்களின் உள்ளாடைகளை அணிந்து கொண்டு கொள்ளை அடிக்கும் ஒரு கும்பல் இருக்கிறது. இவர்களுக்கு அந்த கும்பலுடன் தொடர்பு உள்ளதா அல்லது ஆண்கள் உள்ளாடைகள் அணிந்து அதே கும்பல் கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறதா என போலீசார் குழம்பி போயுள்ளனர்.

