ADDED : அக் 25, 2024 10:58 PM

பெங்களூரு; மழை நின்றாலும் வெள்ளம் வடியாததால், பெங்களூரு சாய் லே - அவுட் மக்கள் கண்ணீரில் காலம் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த 22ம் தேதி இரவு பெய்த கனமழையால், நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள், குளங்களாக மாறின. பல பகுதிகளிலும், 6 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கியது.
எலஹங்கா கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பு, கே.ஆர்.புரம் சாய் லே - அவுட்டை வெள்ளம் சூழ்ந்தது. நேற்றும், நேற்று முன்தினம் நகரில் மழை பெய்யவில்லை. ஆனாலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. கேந்திரிய விஹாரில் மோட்டார் பைப்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
சாய் லே - அவுட்டிலும் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் முழுதும் தண்ணீர் வடியவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், மரக்கதவை படகு போன்று பயன்படுத்தி, அதில் பயணம் செய்கின்றனர். குழந்தைகளை வீடுகளில் இருந்து தெருமுனை வரை, மரக்கதவு படகில் பெற்றோர் அழைத்துச் செல்கின்றனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உணவுப் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்களுக்குச் சென்று, உணவு வாங்கும் நிலை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழையால் சாய் லே - அவுட்டில் வெள்ளம் புகுந்து விடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அங்கு வசிக்கும் மக்கள் கண்ணீர்மல்க கூறினர்.