சோனியா மவுனம் காப்பது துரதிர்ஷ்டம்: பா.ஜ., வருத்தம்
சோனியா மவுனம் காப்பது துரதிர்ஷ்டம்: பா.ஜ., வருத்தம்
ADDED : பிப் 02, 2024 05:17 PM

புதுடில்லி: நாடு பிரிவினை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., தெரிவித்த கருத்து தொடர்பாக சோனியா மவுனமாக இருப்பது துரதிர்ஷ்டம் என பா.ஜ., தெரிவித்து உள்ளது.
சர்ச்சை கருத்து
கர்நாடகாவைச் சேர்ந்தக் காங்கிரஸ் எம்.பி., டிகே சுரேஷ்குமார், மத்திய பட்ஜெட் குறித்து கூறுகையில், தென் மாநிலங்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் அநீதி இழைக்கப்படுகிறது. நாங்கள் எங்களது பங்கு பணத்தை எதிர்பார்க்கிறோம்.
ஜிஎஸ்டி, சுங்க மற்றும் நேரடி வரி உள்ளிட்டவற்றில் எங்களது பங்கை சரியாக வழங்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், எங்களது பங்கு பணம், வட மாநிலங்களில் நடக்கும் வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்யப்படுகிறது. வரும் நாட்களில் இதனை கண்டிக்காவிட்டால், தனி நாடு கோரிக்கை வைக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் கடும் கண்டனம் தெரிவிக்க துவங்கினர்.
பொறுக்க முடியாது
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நாட்டை பிளவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் அதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி. நான் மல்லிகார்ஜூன கார்கே என்ற முறையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் அனைவரும் ஒரே நாடாக இருக்கிறோம். அப்படியே இருப்போம் என உறுதியுடன் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மவுனம் ஏன்
காங்கிரஸ் எம்.பி.,யின் கருத்து தொடர்பாக பா.ஜ.,வின் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: டிகே சுரேஷ் குமாருக்கு இனியும் எம்.பி.,யாக நீடிக்க தகுதி கிடையாது. ராகுல், பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் போது அவரதுக் கட்சி எம்.பி., நாடு பிரிவினைப் பற்றி பேசுகிறார். இந்த விவகாரத்தில் சோனியா மவுனமாக இருப்பது துரதிர்ஷ்டம். அரசியல் சாசனத்தை நாங்கள் மீறுவதாக தினமும் எங்களை குற்றம்சாட்டும் காங்கிரஸ் தலைவர்கள், தங்களது எம்.பி.,யின் கருத்து குறித்து மவுனம் காக்கின்றனர். அரசியல்சாசனத்திற்கு எதிரான இந்த கருத்து குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் மவுனம் காக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

