நக்சல் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
நக்சல் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
ADDED : டிச 15, 2024 11:32 PM

ராய்ப்பூர்: ''சத்தீஸ்கரில், 2026 மார்ச் 31க்குள் நக்சல்களின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உறுதி ஏற்றுள்ளன,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில போலீசாருக்கு விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
சத்தீஸ்கரில் கடந்த ஓராண்டில் 287 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 837 பேர் சரணடைந்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து சத்தீஸ்கர் போலீசார் கடந்த ஓராண்டில் இந்த பணியை திறம்பட செய்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக நக்சல் பயங்கரவாதத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஓராண்டில் 100க்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளில் நக்சல் அச்சுறுத்தல்களை வெகுவாக குறைத்துள்ளது.
மாநிலத்தில், நக்சல் அச்சுறுத்தல்களை வெகுவாக குறைக்க மாநில அரசு உறுதி ஏற்றுள்ளது. இதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கும். 2026 மார்ச் 31க்குள் நக்சல் அச்சுறுத்தல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
சரணடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்கு, அரசு மிகச் சிறந்த கொள்கைகளை வகுத்துள்ளது. எனவே, வன்முறையை கைவிட்டு நக்சல்கள் சரணடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

