ADDED : பிப் 04, 2024 01:40 AM

கோழிக்கோடு: கேரளாவில் நேரு யுவ கேந்திரா ஏற்பாடு செய்த இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்தினர், 'பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எழுப்பாததால் கோபம்அடைந்தார்.
கேரளாவின் கோழிக்கோடில் நேரு யுவ கேந்திரா உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இணைந்து இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த மாநாட்டை மத்திய வெளியுறவு மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி நேற்று துவங்கி வைத்து பேசினார்.
தன் பேச்சை முடித்த பின்னர் இரு கைகளையும் உயர்த்தி, 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷம் எழுப்பினார்.
ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு இளைஞர்கள் தரப்பில் இருந்து பதில் கோஷம் வரவில்லை.
இதனால் கோபமடைந்த அவர் பாரதம் உங்கள் தாய் இல்லையா, அதில் சந்தேகம் உள்ளதா, உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டாமா என கூறிவிட்டு, முழக்கத்தை திரும்ப சொன்னார். அப்போதும் கூட்டத்தில் ஒரு பகுதியினர் அமைதியாக இருந்தனர்.
இதனால் கோபம்அடைந்த அமைச்சர், “ஏன் இந்த அணுகுமுறை? தேசத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்கள் இளைஞர் மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை” என கூறிவிட்டு சென்றார்.