டில்லியில் இரட்டை இயந்திர ஆட்சி மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் உறுதி
டில்லியில் இரட்டை இயந்திர ஆட்சி மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் உறுதி
ADDED : ஜன 10, 2025 11:17 PM

பாட்னா:“உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில் இருந்து டில்லிக்கு புலம் பெயர்ந்த மக்கள்தான் டில்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கின்றனர்,”என, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டில்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை என ஆம் ஆத்மி கூறிக்கொண்டு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யாத அக்கட்சி மீது டில்லி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசு டில்லி மாநகரின் சாலைகள் மற்றும் குடிநீர் வினியோகத்தில் கவனம் செலுத்தவில்லை. சர்வதேச தரத்தில் சாலை, தடையில்லா குடிநீர் வினியோகம் என்ற வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற தவறி விட்டது.
துணைநிலை கவர்னர் எடுத்த நடவடிக்கையால் ஓரளவு சிரமமின்றி வாழும் டில்லிவாசிகள் தேர்தலில் பா.ஜ.,வை தேர்ந்தெடுக்க முடிவு செய்து விட்டனர்.
பிப்., 8-ம் தேதி ஓட்டு எண்ணும்போது, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, இரட்டை இயந்திர சக்தி கொண்ட ஆட்சி டில்லியில் அமையும்.
தேர்தல் வெற்றிக்காக, உ.பி., மற்றும் பீஹாரில் இருந்து போலி வாக்காளர்கள் டில்லிக்கு அழைத்து வரப்படுவதாக பா.ஜ., மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது அவருடைய விரக்தியை வெளிப்படுத்துகிறது. உ.பி மற்றும் பீஹாரில் இருந்து புலம்பெயர்ந்து டில்லியில் வசிப்போர்தான் டில்லி தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கின்றனர்.
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள பூசல், இண்டி கூட்டணி உடைந்து வருவதைக் காட்டுகிறது.

