இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய முடியாது; மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் திட்டவட்டம்
இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய முடியாது; மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் திட்டவட்டம்
UPDATED : ஆக 23, 2026 06:19 PM
ADDED : ஆக 23, 2026 04:02 PM

பாட்னா: ''இட ஒதுக்கீடு முறையை யாரோ சிலருக்காக ரத்து செய்ய முடியாது. தலைமுறை தலைமுறைகளாக சமூக பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள் கொடுக்கும் வகையில் அரசியல் சாசனம் வழங்கிய உரிமையே இட ஒதுக்கீடு,'' என, லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீஹாரில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணியில், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சியின் தற்போதைய தலைவரும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான், பாட்னாவில் இருந்து டில்லிக்கு புறப்பட்டார்.அப்போது, விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்த்து டில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு, சிராக் பஸ்வான் கூறியதாவது: சமூக பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல் சாசனம் வழங்கிய உரிமையே இட ஒதுக்கீடு. யாரோ சிலரின் கோரிக்கைக்காக அதை ரத்து செய்ய முடியாது. பல தலைமுறைகளாக சமூக ரீதியாக பாகுபாடுகளை சந்தித்து வந்த மக்களை, பிரதான நீரோட்டத்துக்கு கொண்டு வருவதற்காகவே இட ஒதுக்கீடு முறை அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக, பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யவே, இட ஒதுக்கீடு உரிமையை அரசியலமைப்பு வழங்கி உள்ளது.
சமீபத்தில் கூட காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பாகுபாடு காட்டப்பட்ட சம்பவம் உத்தரகண்டில் நிகழ்ந்தது. எனவே, சமூக நீதியை வலுப்படுத்துவது தொடர்பான விவாதம் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகிறது. ஜனநாயகத்தில் எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சு மூலம் தீர்வு காண முடியும். அந்த வகையில் இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேசி, இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தையும், அதன் தேவையையும் புரிய வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
