ADDED : ஜூலை 12, 2025 01:40 AM

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்தில், ஹிந்துக்கள் அல்லாத 1,000 பேர், கடவுள் நம்பிக்கை இல்லாமலும், சனாதன தர்மத்தை கடைப்பிடிக்காமலும் பணிபுரிவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலை நிர்வகித்து வரும் திருப்பதி தேவஸ்தானம், ஹிந்து அறநெறிகளை மீறும் ஊழியர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், அண்மையில் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக, ஊழியர் ஒருவரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சஸ்பெண்ட் செய்தது. ஹிந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை அவர் மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஹிந்துக்கள் அல்லாத 1,000 பேர் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லாமலும், சனாதன தர்மத்தை கடைப்பிடிக்காமலும் அவர்கள் பணிபுரிவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
வேற்று மதத்தை சேர்ந்தவர்கள், ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கும் தேவஸ்தான ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், ஹிந்துக்கள் அல்லாதோர் தேவஸ்தானத்தில் எப்படி வேலை செய்கின்றனர் என, பண்டி சஞ்சய் குமார் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

