அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
ADDED : மார் 21, 2025 11:09 PM

புதுடில்லி :'உத்தர பிரதேசத்தில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை, பாலியல் பலாத்கார முயற்சியாக கருத முடியாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உ.பி.,யின் கஸ்கஞ்ச் பகுதியில், 14 வயது சிறுமியை, இரண்டு பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதில் அவர், 'குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை.
ஆடையைக் கிழித்து காயத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். எனவே இதை, பாலியல் தொந்தரவாகவோ, பாலியல் பலாத்கார முயற்சியாகவோ கருத முடியாது' எனக்கூறி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இத்தீர்ப்புக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இத்தீர்ப்பை, முற்றிலும் நிராகரிக்கிறேன். இது, சமூகத்தை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வழிவகுக்கும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்,” என்றார்.