குஜராத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
குஜராத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
ADDED : ஏப் 15, 2025 12:36 AM

நர்மதா : குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நர்மதா மாவட்டத்தில், தான் தத்தெடுத்த கிராமங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
குஜராத்தில் இருந்து, பா.ஜ., சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
அம்மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நர்மதா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை, எம்.பி., என்ற முறையில் அவர் தத்தெடுத்துள்ளார்.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக குஜராத்துக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சென்றார். நர்மதா மாவட்டத்தில், தான் தத்தெடுத்த கிராமங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
நர்மதா மாவட்டத்தின் ஜெட்பூர், கோல்வன், சகாய் ஆகிய இடங்களில் நடந்த விழாவில், மருத்துவமனை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்றார்.
மேலும், கருடேஷ்வரில் நடந்த விழாவில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை அவர் துவக்கி வைத்தார்.
அமட்லா என்ற கிராமத்துக்கு சென்ற அமைச்சர் ஜெய்சங்கர், சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தை பார்வையிட்டார்.
மேலும், 'ஸ்மார்ட் அங்கன்வாடி' மையங்களையும் அவர் பார்வையிட்டார். தான் தத்தெடுத்த கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி தெரிவித்தார்.