சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை
சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை
UPDATED : ஜூலை 11, 2025 10:38 PM
ADDED : ஜூலை 11, 2025 10:26 PM

புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டுக்கு ஜெய்சங்கர் செல்வது இதுவே முதல்முறையாகும்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரு நாடுகளும் உறவுகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்த மோதலுக்கு பிறகு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் வேறு நாடுகளில் சந்தித்து பேசி உள்ளனர்.
இச்சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் நடக்கிறது. கடந்த மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாநாட்டில் பங்கேற்றார்.
இந்நிலையில், வரும் 14 - 15 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கிறது. இம்மாநாட்டில் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னர் அவர், தலைநகர் பீஜிங் சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயையும் அவர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.