உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை
உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை
UPDATED : அக் 17, 2024 07:15 AM
ADDED : அக் 17, 2024 02:39 AM

இஸ்லாமாபாத்: ''எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் எனும் மூன்று தீயசக்திகளை எதிர்த்து போராடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதன்மையான குறிக்கோளை அடைய நேர்மையான பேச்சு முக்கியம்,'' என, பாகிஸ்தானில் தெரிவித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''இரு அண்டை நாடுகளுக்கு இடையே உறவுகள் ஏன் முறிந்தன என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.
பாகிஸ்தானில் நடக்கும் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இஸ்லாமாபாத் சென்றிருந்தது. நேற்று நடந்த மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியதாவது:
நம்பிக்கை இல்லாவிட்டாலோ அல்லது போதுமான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தாலோ, நட்பைக் குறைத்துவிட்டாலோ, நல்ல அண்டை நாடு இல்லாமல் இருந்தாலோ, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காரணங்களும், அதற்குத் தீர்வு காண்பதற்கான காரணங்களும் நிச்சயமாக இருக்கும்.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள், பிரிவினைவாதம், தீவிரவாதத்தால் வகைப்படுத்தப்பட்டால், அவை வர்த்தகம், ஆற்றல் ஓட்டம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க வாய்ப்பில்லை.
பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மேலும், பரஸ்பர நம்பிக்கையுடன் கூட்டாக முன்னோக்கி நகர்ந்தால், எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகள் பெரும் பயனடையலாம்.
எனவே, எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, நட்பு மற்றும் நல்லுறவு அவசியமாகிறது.
பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். அது, உண்மையான கூட்டாண்மையால் மட்டுமே சாத்தியம். ஒருதலைபட்ச முடிவுகளால் அல்ல.
அண்டை நாடுகளுடன் நல்லுறவும், பரஸ்பர நம்பிக்கையும் இல்லாமல் போனால், அது ஏன் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் இன்றைய முக்கிய பிரச்னையாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் எனும் மூன்று தீயசக்திகளை எதிர்த்து போராடுவதே எஸ்.சி.ஓ., அமைப்பின் குறிக்கோளாக உள்ளது. அதை அடைய நேர்மையான பேச்சு அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டுக்கு பின், எஸ்.சி.ஓ., அமைப்பின் எட்டு முடிவுகள் அடங்கிய ஆவணங்களில் ஜெய்சங்கர் கையெழுத்திட்டார். அடுத்த எஸ்.சி.ஓ., மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் ரஷ்யாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்களால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிக்கல் இருந்து வரும் நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை.