கர்நாடகாவுக்கு ரயில்வே நிதி மத்திய அமைச்சர் பெருமிதம்
கர்நாடகாவுக்கு ரயில்வே நிதி மத்திய அமைச்சர் பெருமிதம்
ADDED : நவ 17, 2024 11:15 PM

துமகூரு: ''மத்தியில் காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில், கர்நாடகாவில் ரயில்வே பணிகளுக்கு, 830 கோடி ரூபாய் மட்டுமே விடுவித்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 7,750 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது,'' என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
துமகூரு மாவட்டம், திப்டூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்தியில் 2004 - 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடகாவில் ரயில்வே பணிகளுக்கு, 830 கோடி ரூபாய் மட்டுமே விடுவித்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கர்நாடகாவுக்கு 7,750 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
நாடு முழுதும் 11 புதிய ரயில்வே திட்டப்பணிகள், 39,000 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களில் 1,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.
ஹாசன் - ஹரியூர் - திப்டூர் பசுமை காரிடார் பணிக்கு 3,800 கோடி ரூபாயும்; நெலமங்களா - துமகூரு இடையே ஆறு வழிச்சாலைக்கு 2,000 கோடி ரூபாயும்; துருவகெரே - சின்சூர் சாலை மேம்பாட்டுக்கு 617 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது.
வரும் நாட்களில் திப்டூர் நகரம், சிக்கமகளூரின் அரலகுப்பேயில் வந்தே பாரத் ரயில் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும். துமகூரு - ராயதுர்கா, துமகூரு - தாவணகெரே ரயில்வே பணிகள், விரைவில் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.