மத்திய படையை கேரள அரசு அவமதித்தது மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய படையை கேரள அரசு அவமதித்தது மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 02, 2025 12:42 AM
மூணாறு:வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை நிலச்சரிவு பேரழிவின்போது மத்திய படையை கூட அவமதிக்கும் வகையிலான அரசியலை கேரள அரசு கையாண்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ்குரியன் தெரிவித்தார்.
இடுக்கி மாவட்ட பா.ஜ., அலுவலகம் செருதோணியில் கட்டப்பட்டுள்ளது. அதனை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ்குரியன் திறந்து வைத்து கூறியதாவது:  வயநாட்டில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட மத்திய படையை அவமதிக்கும் வகையிலான அரசியலை கேரள அரசு கையாண்டு வருகிறது.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளா கணக்கு வழங்க காலதாமதம் ஏற்பட்டதால் மத்திய அரசின் உதவி கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டியது அனைத்தும் வழங்கும். கேரளாவில் போலீசார், மக்கள் பிரதிநிதிகள் பேரழிவு ஏற்பட்டபோது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். பாலம் அமைத்து மீட்பு பணிகளுக்கு ராணுவத்தினர் தலைமை வகித்தனர்.
கேரள அரசு முதல்கட்டமாக ரூ.214 கோடி நிதியுதவி கேட்டது. எனினும் மத்திய அரசு ரூ.290 கோடி வழங்கியது. பாலம் அமைப்பதற்கும், ராணுவத்தினருக்கும் மத்திய அரசு செலவிட்டது. ஏற்கனவே கொடுத்த நிதிக்கு கணக்கு வழங்காததால் மீண்டும் நிதி வழங்கவில்லை. கேரளாவில் ரோடு வளர்ச்சி திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது, என்றார்.

