ADDED : மார் 20, 2024 01:16 AM

புதுடில்லி : தேசிய அரசியலில் மற்றொரு சித்தப்பா -- மகன் மோதலால், மத்திய அமைச்சர் பசுபதி குமார் பாரஸ், தன் பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தன் கட்சிக்கு சீட் கொடுப்பது குறித்து எதுவும் பேசப்படாததால் விரக்தி அடைந்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார்.
லோக்சபாவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்புகள் வேகமெடுத்துள்ளன. பீஹாரில், மீண்டும் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வந்துள்ளது.
அதுபோல, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின், லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதிருப்தி
ஆனால் தங்களுடைய ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சியை, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்குக் கூட அழைக்காததால், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பசுபதி குமார் பாரஸ் அதிருப்தியில் இருந்தார்.
ராம்விலாஸ் பஸ்வான், 2020ல் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கட்சி இரண்டாகப் பிரிந்தது. சித்தப்பா பாரஸ் மற்றும் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர்.
ஐந்து எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பாரஸ் உடன் சென்றனர். அப்போது சிராக் பஸ்வான் தனிமையில் விடப்பட்டார்.
மேலும், பா.ஜ., உடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் சிராக் பஸ்வான் வெளியேறினார். அந்த நேரத்தில், பாரஸ் உள்ளே புகுந்தார். மத்தியில் அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைத்தது.
பீஹாரில் தற்போது லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. சிராக் பஸ்வான் தலைமையிலான கட்சிக்கு கூட்டணியில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
தன்னிடம் பேச்சு நடத்தப்படாததற்கு, பாரஸ் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தார். கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாகவும் கூறியிருந்தார்.
கூட்டணி தர்மம்
இந்நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், பசுபதி குமார் பாரஸ் நேற்று அறிவித்தார்.
ராம்விலாஸ் பஸ்வானின் ஹாஜிபுர் தொகுதி யில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். இந்தத் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக சிராக் பஸ்வானும் அறிவித்துள்ளார்.
இது குறித்து பாரஸ் நேற்று கூறியதாவது:
தே.ஜ., கூட்டணியில், நல்ல நட்புடன் நாங்கள் இருந்து வந்தோம். கூட்டணி தர்மத்தை காத்து வந்தோம். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் எங்களுடன் பேசாமல், பா.ஜ., அநீதி இழைத்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த சில நாட்களில் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தர பிரதேசத்தில், ஷிவ்பால் -- அகிலேஷ் யாதவ், மஹாராஷ்டிராவில், சரத் பவார் - அஜித் பவார் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, மற்றொரு சித்தப்பா -- மகன் மோதல் தற்போது பீஹாரில் நடந்துள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைவது குறித்து பாரஸ் பேசி வருவதாக கூறப்படுகிறது.

