UPDATED : ஜன 31, 2024 02:24 AM
ADDED : ஜன 29, 2024 11:43 PM

கோல்கட்டா : பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், நடைமுறைக்கு வராத சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம், இன்னும் ஏழு நாட்களுக்குள் அமலுக்கு வந்துவிடும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழலில், இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக நம் நாட்டில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க மோடி அரசு முடிவு செய்தது.
இதற்காக குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தது. அது, 2019ல் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியது. ஜனாதிபதியும் உடனடியாக ஒப்புதல் அளித்ததால், சட்டம் ஆனது மசோதா. ஆனால், இதுவரை அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
கால நீட்டிப்பு
பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அந்த சட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா குழுவிடம் இருந்து ஆறு மாதத்துக்கு ஒருமுறை கால நீட்டிப்பு பெற வேண்டும். அந்த வேலையை உள்துறை அமைச்சகம் தவறாமல் செய்து வருகிறது.
கால தாமதத்துக்கு முக்கிய காரணம், நாட்டின் பல பகுதிகளில் இந்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம். 'அண்டை நாடுகளில் கொடுமைகளுக்கு பயந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் அனைவருக்கும் குடியுரிமை அளிப்பதே நியாயம்.
'அதை விடுத்து, முஸ்லிம்களை தவிர்த்து மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சட்டம் வழி செய்கிறது; இந்த பாரபட்சத்தை ஏற்க முடியாது' என எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கூறின.
'சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மூன்றுமே முஸ்லிம் நாடுகள். அங்கே மற்ற மதத்தினர் தான் சிறுபான்மை. அவர்கள் தான் கொடுமைக்கு ஆளாகி இந்தியாவுக்குள் தஞ்சம் வருவரே தவிர, முஸ்லிம்களுக்கு அந்த பிரச்னை இல்லை. ஆகவே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அவசியமே எழவில்லை' என அரசு பதில் சொன்னது.
என்றாலும் எதிர்க்கட்சிகள் திருப்தி அடையவில்லை. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார். வங்கதேசத்தில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் ஊடுருவி நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
தடுக்க முடியாது
வழக்கமாக அவர்கள் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டளிக்கின்றனர். எனவே, மம்தா இதை இழப்பாக பார்க்கிறார். இந்த சட்டத்தின் ஆங்கில பெயரில் உள்ள முதல் வார்த்தைகளை சேர்த்தால் சி.ஏ.ஏ., என வருகிறது. அதை குறிப்பிட்டு, “தேர்தலுக்காக மத்திய அரசு கா கா என கூவுகிறது,” என்றார் மம்தா.
ஆனால், 'குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்தார். சட்டம் அமலுக்கு வரப்போகும் தகவலை மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று தெரிவித்தார்.
இவர், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; மத்துவா என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தினர், மேற்கு வங்கத்தில் கணிசமாக உள்ளனர். இவர்கள், 1950 முதல் மேற்கு வங்கத்தில் குடியேறியவர்கள்.
அமலுக்கு வராது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மோடி அரசு, தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்தப் போவதாக கூறியிருப்பதை, தேர்தலுக்கான அடுத்த அதிரடி என்கின்றன எதிர்க்கட்சிகள்.
திரிணமுல் நிர்வாகி குணால் கோஷ், ''மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வராது என்பதை முதல்வர் மம்தா ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். ''லோக்சபா தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது,'' என்றார்.