ADDED : நவ 01, 2024 11:24 PM

''காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுலால் செய்ய முடியாததை, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்துள்ளார். நான் அவரை பாராட்டுகிறேன்,'' என மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் அரசின், வாக்குறுதி திட்டங்களில் ஒன்றான, சக்தி திட்டம் மறு பரிசீலனை செய்யப்படும் என, துணை முதல்வர் சிவகுமார் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சைக்கு காரணமானது. சக்தி திட்டத்தை நிறுத்த கூடாது.
தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளும் திட்டம் இருக்கும் என, உறுதியளித்து விட்டு, இப்போது திடீரென நிறுத்துவதாக கூறுவது சரியல்ல என, சில பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான முதல்வர் சித்தராமையா, எந்த காரணத்தை முன்னிட்டும், வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது என, கூறினார். முதல்வரும், துணை முதல்வரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதை தீவிரமாக கருதிய, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டித்தார்.
இது தொடர்பாக, மத்திய அமைச்சர் சோமண்ணா, டில்லியில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அனுபவம் மிக்க அரசியல்வாதி. வாக்குறுதி திட்டங்கள் விஷயத்தில், நேற்று (முன் தினம்) முதல்வரையும், துணை முதல்வரையும் கண்டித்தது சரிதான். சோனியா, ராகுலால் செய்ய முடியாததை, கார்கே செய்துள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன்.
வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த, சித்தராமையா அரசு திணறுகிறது. அரசின் வலி, வேதனையை மறைத்து வைக்க முடியாமல், மறைமுகமாக வெளிப்படுத்திய வெளிப்படுத்திய சிவகுமாரையும் பாராட்டுகிறேன்.
நாட்டின் பொருளாதாரம், மாநில பங்களிப்பு, பொருளாதார ஒழுங்கை மனதில் கொண்டு, அரசு நடத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதற்கு முன், ஒரு முறைக்கு பத்து முறை யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -