வாழ்த்தியதில் வஞ்சப்புகழ்ச்சி; வெகுண்டது கவிதா கட்சி; முக்கோண அரசியலில் முந்துவது யார்?
வாழ்த்தியதில் வஞ்சப்புகழ்ச்சி; வெகுண்டது கவிதா கட்சி; முக்கோண அரசியலில் முந்துவது யார்?
ADDED : ஆக 28, 2024 10:15 AM

புதுடில்லி: டில்லி மதுபான ஊழல் வழக்கில், ஜாமின் பெற்ற பாரத் ராஷ்டிர சமிதியை சேர்ந்த கவிதாவுக்கு, வஞ்சப்புகழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் சஞ்சய் குமாருக்கு கவிதாவின் சகோதரர் கே.டி.ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
டில்லி மதுபான ஊழல் வழக்கில், பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு, ஐந்து மாத சிறைவாசத்துக்கு பிறகு, ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சமூகவலைதளத்தில் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சஞ்சய் குமார் கூறியதாவது: ஊழல் வழக்கில் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கும் அதன் வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்உங்களின் அயராத முயற்சிக்கு இறுதியில் பலன் கிடைத்தது.
இந்த ஜாமின் பி.ஆர்.எஸ்., மற்றும் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி. காங்கிரசை ஆதரிப்பதில் கே.சி.ஆரின் குறிப்பிடத்தக்கது அரசியல் புத்திசாலித்தனம். நீதிமன்றத்தில் கவிதாவை ஆதரித்த வக்கீல், இப்போது தெலுங்கானாவில் இருந்து ராஜ்யசபா பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவ்வாறு சஞ்சய் குமார் கூறியுள்ளார்.
கவிதா சகோதரர் கோபம்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் மாநில அமைச்சரும், கவிதாவின் சகோதரருமான கே.டி.ராம ராவ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''சஞ்சய் குமாரின் கருத்து அவரது மத்திய அமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது. இந்த கருத்தை கவனத்தில் கொண்டு அவமதிப்பு நடவடிக்கைகளை துவங்க வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்றத்தை கேட்டு கொள்கிறேன். உள்துறை விவகாரங்களுக்குப் பொறுப்பான ஒரு மத்திய அமைச்சரான நீங்கள், உச்ச நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ., குற்றச்சாட்டு
'கவிதாவுக்கு ஜாமின் கோரி வழக்கு நடத்திய காங்கிரஸ் பிரமுகர் அபிசேக் சிங்வி, தெலுங்கானாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிட்டார். அவர் தோற்று விடக்கூடாது என்பதற்காக, 39 ஓட்டுகள் இருந்தும், பி.ஆர்.எஸ்., கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை' என்று பா.ஜ., கட்சியினர் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் மறுப்பு
இந்நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கூறியதாவது: கவிதாவுக்கு ஜாமின் வழங்கியதை பார்க்கும்போது பி.ஆர்.எஸ்-ஐ பா.ஜ.,வுடன் இணைப்பதற்கான செயல்முறை துவங்கி உள்ளதைக் காட்டுகிறது. பி.ஆர்.எஸ்., தலைவர்கள் டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்களுடன் பேசியுள்ளனர்.
கவிதாவுக்கு ஜாமின் பெற அமலாக்கத்துறை உதவியுள்ளது. ஜாமின் கிடைத்ததற்கான காரணங்களை ஆழமாக ஆராயும்போது, பி.ஆர்.எஸ்-ஐ பா.ஜ.,வுடன் இணைப்பதற்கான வேலைகள் துவங்கி உள்ளது என்பது தெளிவாகிறது'. இவ்வாறு அவர் கூறினார்.

