ADDED : டிச 11, 2024 11:37 PM
தங்கவயல் : ''தங்கவயலில் கட்சி, கொடி, மதம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பொதுநல அமைப்பாக, தங்கவயலை காக்க ஐக்கிய முன்னணி அமைப்பு அமைக்கப்படும்,'' என, வக்கீல் ஜோதிபாசு தெரிவித்தார்.
ராபர்ட்சன்பேட்டையில் அவர் அளித்த பேட்டி:
தங்கவயலில் பெமல் ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை, தங்கச்சுரங்க தொழிலாளர் நிலுவைத் தொகை, குடியிருக்கும் வீடுகள், சுகாதார சீர்கேடு, நகராட்சி பிரச்னைகள் உள்ளன. இவை குறித்து தனிப்பட்ட ஒரு கட்சியோ, அமைப்போ குரல் எழுப்பவோ, போராடவோ அதற்குரிய வலிமை இல்லை. எனவே ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் தான், எதையும் சாதிக்க முடியும்.
அரசு மருத்துவமனையின் கட்டடம் மட்டுமே உள்ளது. உரிய மருத்துவர்கள், ஐ.சி.யு., வசதி இல்லை. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
நகராட்சியில் எங்கும், எதிலும் ஊழல் நடக்கிறது என்று நகராட்சியின் முன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
பெமல் ஒப்பந்த தொழிலாளர்களின் பல கோரிக்கைகள் உள்ளன. 26 நாட்கள் போராட்டத்தால் இன்னும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
எனவே தங்கவயலை காக்க ஐக்கிய முன்னணி அமைப்பு அமைக்கப்படும். இந்த அமைப்பில், அனைத்துக்கட்சியினர், பொது நல அமைப்பினர் ஒருங்கிணைய ஒப்புதல் அளித்துள்ளனர். ராபர்ட்சன்பேட்டையில் வரும் 14ம் தேதி இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.