ADDED : அக் 25, 2024 12:46 AM

பெங்களூரு,
மழை காரணமாக, ஓசூர் சாலையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கடுப்பான ஐ.டி., ஊழியர்கள், கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு, வீடுகளுக்கு நடந்தே சென்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணி முதல் பெய்த மழையால், நகரின் பல இடங்களில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது; வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன.
பெங்களூரில் இருந்து தமிழகத்தை இணைக்கும், ஓசூர் சாலையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
குறிப்பாக, ரூபேன அக்ரஹாரா என்ற இடத்தில் வாகனங்கள் தேங்கி நின்றன. வேலை முடிந்து அலுவலக கார்களில் வீட்டிற்கு புறப்பட்ட ஐ.டி., ஊழியர்கள், போக்குவரத்து நெரிசலால் கடுப்பாகினர்.
சில ஊழியர்கள் அலுவலக காரில் இருந்து இறங்கி, மேம்பாலத்தில் நடந்தே வீடுகளுக்கு சென்றனர்.
இதை பார்த்த சில கார்களின் உரிமையாளர்களும், கார்களை மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு, இறங்கி நடையை கட்டினர்; நேற்று காலை வந்து கார்களை எடுத்து சென்றனர்.
போக்குவரத்து நெரிசலால் அரசு மீது, ஐ.டி., ஊழியர்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 'எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், 2 கி.மீ., துாரத்தை கடக்கவே இரண்டு மணி நேரம் ஆகிறது.
'அவசர மருத்துவ சேவைக்காக ஆம்புலன்சில் செல்பவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கினால், அவர்களின் நிலைமை என்னாவது' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.