நிலச்சரிவில் குடும்பத்தை இழந்தார்; விபத்தில் வருங்கால கணவன் பலி; கேரள பெண்ணை துரத்தும் துயரம்!
நிலச்சரிவில் குடும்பத்தை இழந்தார்; விபத்தில் வருங்கால கணவன் பலி; கேரள பெண்ணை துரத்தும் துயரம்!
ADDED : செப் 12, 2024 04:43 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி குடும்பத்தினரை பறி கொடுத்த பெண், அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்கு முன்னர் அவரது வருங்கால கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்புக்கு மலையாள நடிகர் மம்முட்டி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சோகம்
கேரளாவின் அம்பலவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜென்சன். இவர் வயநாட்டை சேர்ந்த ஸ்ருதி என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பெற்றோர் சம்மதத்துடன் வரும் இம்மாதம்(செப்.,) திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில் தாய், தந்தை என 9 குடும்ப உறுப்பினர்களை ஸ்ருதி பறி கொடுத்தார். கடும் சோகத்தில் இருந்த ஸ்ருதியை ஜென்சன் கடும் முயற்சி செய்து தேற்றி கொண்டு வந்தார். அவருக்கு மன ரீதியாக ஆறுதல் அளித்ததுடன், பெற்றோர் விரும்பியபடி வரும் டிச., மாதம் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கார் விபத்து
திருமணம் தொடர்பான ஏற்பாடுகளை செய்ய இருவரும் நேற்று ஒன்றாக காரில் பயணித்தனர். அப்போது, கார் விபத்தில் சிக்கியது. அதில் படுகாயமடைந்த ஜென்சன் உயிரிழந்தார். ஸ்ருதி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'எதிர்காலத்தில் காப்பாற்றுவேன்' என உறுதி அளித்திருந்த ஜென்சனின் மறைவு ஸ்ருதிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த துயரத்தில் இருந்து எப்படி அவர் மீள்வார் என தெரியவில்லை என்கின்றனர் அக்கம்பக்கத்தினர்.
இரங்கல்
ஜென்சனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், 'ஈடு செய்ய முடியாத இழப்பை ஸ்ருதி சந்தித்து உள்ளார். இந்த சோகமான நேரத்தில் ஜென்சன் குடும்பத்திற்கும், ஸ்ருதிக்கும் மாநில மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்' எனக்கூறியுள்ளார்.
நடிகர் மம்மூட்டி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'மருத்துவ சிகிச்சை அளித்தும், பிரார்த்தனை செய்தம் ஜென்சன் பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்துகிறது. இவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஸ்ருதிக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத வேதனை ஏற்பட்டு உள்ளது' எனக்கூறியுள்ளார்.

