அயோத்தி ராமர் கோவிலில் உ.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தரிசனம்
அயோத்தி ராமர் கோவிலில் உ.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தரிசனம்
ADDED : பிப் 11, 2024 11:59 PM

லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில், உ.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்களுடன் சேர்ந்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், கடந்த ஜன., 22ம் தேதி, பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும்படி, உ.பி., - எம்.எல்.ஏ.,க் கள் மற்றும் எம்.எல்.சி.,க்களுக்கு சமீபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்தார்.
இதை, முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்தார்.
இந்நிலையில், சமாஜ்வாதியை தவிர, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சிகளான காங்., - பகுஜன் சமாஜ் - சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் என, மொத்தம் 325 பேர், லக்னோவில் இருந்து 10 சொகுசு பஸ்கள் வாயிலாக நேற்று அயோத்திக்கு சென்றனர்.
சமாஜ்வாதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரீய லோக் தளம் எம்.எல்.ஏ.,க்களும் உடன் சென்றனர். உ.பி., சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா, சட்ட மேலவை தலைவர் குன்வர் மன்வேந்திர சிங் ஆகியோரும் அயோத்திக்கு சென்றனர்.
அயோத்திக்கு வந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பொது மக்கள் மலர் துாவி வரவேற்றனர்.
இதன் பின், எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள், அமைச்சர்களுடன் இணைந்து, ராமர் கோவிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சுவாமி தரிசனம் செய்தார்.