அதிகாலை பயணத்தால் விபரீதம்: உ.பி.,யில் மினி வேன்-லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
அதிகாலை பயணத்தால் விபரீதம்: உ.பி.,யில் மினி வேன்-லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 19, 2025 11:13 AM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மினி வேன்- லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், யமுனா விரைவு சாலையில் மினி வேன்- லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ''இந்த விபத்து அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. ஆக்ரா நோக்கி சென்ற மினி வேன் எதிரே வந்த லாரி மீது மோதியது தான் விபத்திற்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என எஸ்.எஸ்.பி., ஷலோக் குமார் தெரிவித்தார்.
விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
சத்தீஸ்கரில் மற்றொரு விபத்து
சத்தீஸ்கர் மாநிலம், கங்கர் மாவட்டத்தில் பாலத்தின் ஓரத்தில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் கார் மோதி தீப்பற்றியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேஷ்கலில் இருப்து கான்கருக்கு காரில் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 1.30 மணிக்கு நிகழ்ந்து உள்ளது. விபத்தில் சிக்கிய போது கார் டிரைவர் உட்பட அனைவரும் போதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.