UPDATED : நவ 09, 2025 07:56 AM
ADDED : நவ 09, 2025 04:10 AM

ஒரு நுாற்றாண்டை கடந்த கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும், தேர்தல் எப்படி நடத்துவது என்பதை, பா.ஜ.,விடமிருந்து தான் காங்., கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஏதாவது ஒரு மாநிலத்தில், ஆண்டு முழுதும் ஏதேனும் ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி தேர்தலில் களம் கண்ட கட்சியான, பா.ஜ., 2027ல் உத்தரப் பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து கவலையில் உள்ளது.
'பீஹார் தேர்தலில் வெற்றி நிச்சயம்' என்கிற இறுமாப்பில் உள்ள பா.ஜ.,விற்கு, உ.பி., பெரும் தலைவலியாக உள்ளது. 2027 பிப்ரவரி - -மார்ச்சில் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கும். இங்கு, மூன்றாவது முறையாக, பா.ஜ., ஆட்சி அமைத்தால் தான், நான்காவது முறையாக, 2029 பார்லிமென்ட் தேர்தலில், மோடி மீண்டும் வெற்றி பெற முடியும் என, மத்திய பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் என, அனைவரின் கவலையும் உ.பி., சட்டசபை தேர்தல் குறித்து தான். இந்த மூவரும், ஒருவருக்கு ஒருவர் எதிராக இருந்தாலும், உ.பி., தேர்தல் விவகாரத்தில் ஒற்றுமையாகி விட்டனர்.
மோடியின் கவனம் முழுக்க உ.பி., மீதுதான் என்கின்றனர்; காரணம், உட்கட்சி பூசல்கள். உ.பி., - பா.ஜ., மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி. இவரின் பதவிக்காலம், 2023 ஜனவரியில் முடிந்துவிட்டாலும், இவருடைய பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது; காரணம், அடுத்த தலைவரை நியமிக்க முடியவில்லை.
முதல்வர் யோகி மற்றும் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுர்யா, பிரிஜேஷ் பதக் ஆகியோரிடையே ஒற்றுமை இல்லை. இதனால் உ.பி., - பா.ஜ.,வின் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க முடியவில்லை.
இதன் காரணமாக, உ.பி., கட்சி தலைவர்களை, வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களின் தலைவர்களாக நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கட்சி தொண்டர்களின் உற்சாகத்தைக் குறைத்துள்ளது. 2027 சட்டசபை தேர்தலில், பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது கேள்விக்குறியாகி உள்ளது.

