உ.பி., கலவரம் சம்பல் மாவட்டத்துக்கு வெளியாட்கள் வருவதற்கான தடை 10 வரை நீட்டிப்பு
உ.பி., கலவரம் சம்பல் மாவட்டத்துக்கு வெளியாட்கள் வருவதற்கான தடை 10 வரை நீட்டிப்பு
ADDED : டிச 01, 2024 05:04 AM
சம்பல்: உத்தர பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்தில், வெளியாட்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை, டிச., 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.
ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதை கடந்த 19ல் விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது. இதன்படி, கடந்த 24ல், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், நவ., 30 வரை, சம்பல் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த தடை நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், சம்பல் மாவட்டத்துக்கு வெளியாட்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டிச., 10 வரை நீட்டித்து, மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
அமைதி, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், சம்பல் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி எந்தவொரு சமூக அமைப்போ, வெளி நபர்களோ, மக்கள் பிரதிநிதியோ, டிச., 10 வரை மாவட்டத்தில் நுழைய கூடாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில், சம்பலுக்கு வரவிருந்த சமாஜ்வாதி முசாபர்நகர் எம்.பி., ஹரேந்திர மாலிக், காஜியாபாதில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.