கன்வார் யாத்ரீகர் குறித்து அவதுாறு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
கன்வார் யாத்ரீகர் குறித்து அவதுாறு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 20, 2025 10:51 PM

மீரட்:''கன்வார் யாத்ரீகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதுாறாக பதிவிட்டு வருகின்றனர்,'' என, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை நதியில் இருந்து புனித நீர் சேகரித்து திரும்பிய கன்வார் யாத்ரீகர்களை, மீரட் மற்றும் காஜியாபாத் நகரில் மலர் துாவி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
மக்களின் கடவுள் பக்தியையும் நம்பிக்கையையும் சிலர் அவதுாறு செய்கின்றனர். கன்வார் யாத்ரீகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறாக சிலர் பதிவிட்டுள்ளனர். மேலும்,
கன்வார் யாத்ரீகர்கள் கலவரம் செய்வது, ஹோட்டல்களை சூறையாடுவது, வாகனங்களை சேதப்படுத்துவது மற்றும் பொதுமக்களை அடிப்பது போன்ற போலி வீடியோக்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
கன்வார் யாத்ரீகர் என்ற பெயரில் சில விஷமிகள் காவி உடை அணிந்து இதுபோன்ற செயல்களை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலி யாத்ரீகர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
கன்வார் யாத்ரீகள் போலி நபர்களை விலக்கி வைக்கவும். அவர்களை உங்களுடன் இணைந்து யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்காதீர். போலிகளை கண்டுபிடித்தால் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கன்வார் யாத்திரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடக்க டில்லி - -டேராடூன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கங்கா கால்வாய் சாலையில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்வார் யாத்திரை ஏற்பாடுகளை மேற்பார்வையிட வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், காஜியாபாத் துதேஷ்வர்நாத் கோவிலில் சிவலிங்கத்துக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார்.
அதன்பின், வளாகத்தை ஆய்வு செய்த முதல்வர், கோவில் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.