நக்சல் கும்பலுடன் தொடர்பு உ.பி., தம்பதி பிடிபட்டனர்
நக்சல் கும்பலுடன் தொடர்பு உ.பி., தம்பதி பிடிபட்டனர்
ADDED : மார் 06, 2024 08:58 PM
லக்னோ:உத்தர பிரதேச மாநிலத்தில், நக்சல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, உ.பி., மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கை:
தொடர்பு
பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த்வர் கிருபாசங்கர் சிங்,49. அவரது மனைவி பிந்தா சோனா என்ற மஞ்சு,41. இருவரும், அரசால் தடை செய்யப்பட்ட நக்சல் இயக்கத்தில் தொடர்பில் இருந்தனர். மேலும், நாட்டுக்கு எதிராகப் போர் துவங்கும் திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2017- - 2018ம் ஆண்டில் இந்த தம்பதி, நக்சலைட் குவாந்தன் சீனிவாசன் என்பவருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தது மட்டுமின்றி, அவர் தங்குவதற்கு மஹராஜ்கஞ்ச் மாவட்டம் கர்மாஹியா கிராமத்தில் இடம் கொடுத்துள்ளனர். மேலும், அங்குள்ள பள்ளியில் போலி பெயரில் வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஏழு பேர் மீது 2019ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றிய மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
திருமணம்
அப்போது, நக்சல் கும்பலுடன் கிருபாசங்கர் சிங் மற்றும் அவரது மனைவி பிந்தா சோனா ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
ராய்பூரில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் போது கிருபாசங்கர் சிங், பிந்தா சோனாவுடன் தொடர்பு கொண்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக தேடப்பட்ட இருவரும் பிரயாக்ராஜ் நகரில் பிடிபட்டனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

