கும்பலால் முதியவர் அடித்துக் கொலை வழக்கை வாபஸ் பெற உ.பி., அரசு முடிவு
கும்பலால் முதியவர் அடித்துக் கொலை வழக்கை வாபஸ் பெற உ.பி., அரசு முடிவு
ADDED : நவ 15, 2025 10:39 PM
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் முஹமது அக்லக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் உ.பி., அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
புதுடில்லி அருகே உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் பிசாடா கிராமத்தில் வசித்தவர் முஹமது அக்லக்,52.
கடந்த 2015ம் ஆண்டு செப்.,28ம் தேதி இவர், பசுவை அறுத்து அதன் இறைச்சியை தன் வீட்டு பிரிஜில் சேமித்து வைத்துள்ளதாக தகவல் பரவியது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் வீட்டுக்கு வந்த ஒரு கும்பல், வீட்டுக்குள் இருந்து அக்லக்கை வெளியே இழுந்து வந்து, நடுத்தெருவில் வைத்து சரமாரியாக தாக்கியது. தந்தையைக் காப்பாற்ற வந்த மகன் டேனிஷுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
மயங்கிச் சரிந்த அக்லக், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது மகன் டேனிஷுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பினர். அக்லக் மனைவி இக்ரமான் கொடுத்த புகார்படி ஜர்ச்சா போலீசார், 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, கிரேட்டர் நொய்டா சூரஜ்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முஹமது அக்லக் கொலை வழக்கில், 10 பேர் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதாக, உத்தரப் பிரதேச அரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து, அரசு வழக்கறிஞர் பாக்சிங் பட்டி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
கடந்த, 2015ல் நடந்த முஹமது அக்லக் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மாநில அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அரசின் இந்தக் கோரிக்கை, சூரஜ்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டிச.,12ம் தேதி விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அக்லக் மனைவி இக்ரமான் சார்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் யூசுப் சைபி கூறுகையில், “இது தொடர்பாக அதிகாரப்பூர்வ ஆவணங்களை இன்னும் பார்க்கவில்லை. ஆனால், அரசின் இந்த நடவடிக்கை குறித்து கேள்விப்பட்டேன். விசாரணைக்கு முன் ஆவணங்களை ஆய்வு செய்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.

