தடையை மீறி சம்பல் சென்ற ராகுல் தடுத்து நிறுத்தியது உ.பி., போலீஸ்
தடையை மீறி சம்பல் சென்ற ராகுல் தடுத்து நிறுத்தியது உ.பி., போலீஸ்
ADDED : டிச 05, 2024 01:09 AM

காசியாபாத், உத்தர பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், மாநில எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் நிலவியது.
உத்தர பிரதேசத்தின் சம்பலில், முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த இடத்தில் ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 24ல் தொல்லியல் துறை அதிகாரிகள், மசூதியில் இரண்டாவது முறையாக ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோதல்
வாகனங்கள் எரிக்கப்பட்டன; அதிகாரிகள் மீது கல் வீச்சு தாக்குதலும் நடந்தன. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அடித்து விரட்டினர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலில், நான்கு பேர் பலியாகினர். பாதுகாப்பு பணியாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பதற்றத்தை தணிக்கும் வகையில், சம்பல் மாவட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், மற்றொரு எம்.பி.,யான பிரியங்கா உள்ளிட்டோர் நேற்று டில்லியில் இருந்து உத்தர பிரதேசம் சென்றனர்.
டில்லி - மீரட் சாலையில், காஜிபுர் எல்லையில் அவர்கள் அனைவரும் உத்தர பிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். வெளியாட்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதிக்க வலியுறுத்தி ராகுல், பிரியங்காவுடன் வந்த காங்கிரஸ் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அப்போது, அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி ராகுல் கூறியதாவது:
எதிரானது
நாங்கள் சம்பல் செல்ல முயல்கிறோம்; போலீசார் அனுமதி மறுக்கின்றனர். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக அங்கு செல்ல எனக்கு உரிமை உள்ளது. ஆனால், அவர்கள் என்னை தடுத்து நிறுத்துகின்றனர்.
நான் தனியாக செல்ல அனுமதி கேட்டும் மறுக்கின்றனர். போலீசாருடன் செல்லவும் தயாராக இருக்கிறேன். அதையும் அவர்கள் ஏற்கவில்லை. இன்னும் சில நாட்களுக்குப் பின் நாங்கள் வந்தால், எங்களை அங்கு செல்ல அனுமதிப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
இது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கு எதிரானது; அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
நாங்கள் அமைதியாக சம்பலுக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவும், அங்குள்ள மக்களை சந்திக்கவும் விரும்புகிறோம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு வழங்கியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.
போராடுவோம்
இது தான் புதிய இந்தியா, அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா. அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசாருடன் பலமுறை பேச்சு நடத்தியும் அவர்கள் அனுமதிக்காததை அடுத்து, இரண்டு மணி நேரப் போராட்டத்துக்கு பின் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் டில்லி திரும்பினர்.
பதற்றமான சூழலை அடுத்து, உத்தர பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தால், உத்தர பிரதேச எல்லையான காசிப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல மணி நேரம் அணிவகுத்து நின்றன. ராகுல், பிரியங்கா டில்லி திரும்பியதை அடுத்தே நிலைமை சீரானது.