ADDED : நவ 26, 2024 12:57 AM

சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பலில், மசூதியில் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, நான்காக உயர்ந்தது. இதற்கிடையே, அங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வெளியாட்கள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி குறித்து வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலை இடித்து, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், இது தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இதன்படி, வழக்கறிஞர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு, சமீபத்தில் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் ஆய்வு செய்ய குழுவினர் நேற்று முன்தினம் சென்றனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷமிட்டனர். ஆய்வு மேற்கொண்டோர் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்; வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும், அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்த வன்முறையில், மூன்று பேர் உயிரிழந்தனர். போலீசார் உட்பட, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை, நான்காக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, சம்பல் பகுதியில், நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரச்னை தீவிரமாவதை தடுப்பதற்காக, வெளியாட்கள் நுழைவதற்கும் அனுமதி மறுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் என, வெளியாட்கள் யாரும் வர வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
சம்பல் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்.பி., ஜியா வுர் ரஹ்மான் பர்க் உட்பட 400 பேர் மீது, கலவரத்தை துாண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வந்தபோதும், பதற்றம் நிலவுகிறது.
மக்களின் கருத்துக்களை கேட்காமல், பா.ஜ., தன் அதிகார பலத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்த முயற்சி நல்லதல்ல. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
ராகுல்,
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,